கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்தவுடன் நெடுஞ்சாலைகளில் இருந்த சில மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அவர் மறைவுக்கு பிறகு, அதிமுக அரசு மதுக்கடைகளை மூடியதா என்றால் இல்லை என்பது தான் பதில்.

இன்று ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,
“திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது. அப்படி திடீரென்று குடியை நிறுத்தச் சொன்னால், எப்படி ஒருவரால் அதை நிறுத்த முடியும்?. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. குடிப்பவர்களின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்த தேர்தல் முதல்வரின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்தும் தேர்தலாகும் என்றார். ராஜ கண்ணப்பன் கட்சியை விட்டு விலகியதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டு தான் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here